அரசியல் எனக்கு பொழுதுபோக்கல்ல..! சினிமாவிலிருந்து விலகும் விஜய்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுவதுமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை.
அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜய்யின் ரசிகர்களுக்கு அந்த அறிக்கையில் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
சினிமாவிலிருந்து விலகல்
ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுவதுமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தாலும், சினிமாவிலிருந்து விஜய் விலகுவது அவர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது.