கைக்கொடுக்காத சினிமா.. சின்னத்திரைக்கு தாவும் வடிவேலு? ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடியாம்!
நடிகர் வடிவேலு சின்னத்திரையில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்ற படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் 2-ம் பாகம் எடுத்தபோது ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் நின்றுபோனது. இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனாலும் தீர்வு எட்டப்படாததால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின்னர் பிரச்சினை தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அவர் நடித்தார்.
சின்னத்திரையில்?
ஆனாலும், தற்போது வடிவேலு கைவசம் பெரிய அளவில் படங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு சின்னத்திரையில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் அவர் கலந்து கொள்வது பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவேலுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எல்லா பிரச்சனைகளும் முடிந்து மீண்டும் களமிறங்கிய நடிகர் வடிவேலுவுக்கு, சினிமா கைக்கொடுக்காததால் சின்னத்திரைக்கு தாவியுள்ளதாக கூறப்படுகிறது.