நான் திமுகவில் இணைய காரணம் இதுதான் - சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
திவ்யா சத்யராஜ்
பிரபல நடிகர் சத்யாராஜுக்கு திவ்யா சத்யராஜ் என்கிற மகள் உள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான இவர், மகிழ்மதி என்கிற இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று(19.01.2025) அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திவ்யா சத்யராஜ் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிகழ்வின் போது பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைவு
இது குறித்து பேசிய அவர், "நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. அதற்கு உதாரணம் தலைவரின் காலை உணவு திட்டம். திமுக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. அதற்கு உதாரணம் தலைவரின் புதுமை பெண் திட்டம்.
அதை விட அனைத்து மதங்களுக்கும் மரியாதை கொடுக்கும் கட்சி திமுக. எனக்கு சிறு வயதில் இருந்தே திமுகவின் கொள்கைகள் மீது ஈர்ப்பு உண்டு. எனக்கு மக்கள் பணி செய்வது ரொம்ப ஆர்வம். தலைவர் எந்த பதவி கொடுத்தாலும் கடுமையாக உழைப்பேன்" என கூறினார்