ஆன்லைன் மோசடியில் பறிபோன பணம் - புலம்பும் நடிகர் மிர்ச்சி செந்தில்
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தது குறித்து நடிகர் மிர்ச்சி செந்தில் பேசியுள்ளார்.
மிர்ச்சி செந்தில்
சைபர் மோசடியால் பொதுமக்கள் நாளுக்கு நாள் பணத்தை இழப்பதை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை உருவாக்கி வருவதோடு, மக்களிடையே இது குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில் மோசடியாளர்கள், புது புது வழிகளில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்த மோசடியில் நடிகர் மிர்ச்சி செந்திலும் தனது பணத்தை இழந்துள்ளார்.
சைபர் மோசடி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகர் மிர்ச்சி செந்தில். சமீபத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பேசிய அவர், "நான் ஒரு ஒட்டிக்கொண்டிருக்கும் போது கோயம்புத்தூரை சேர்ந்த பெரிய ஹோட்டல் தொழிலதிபர் வாட்ஸ்அப்பில் ஒரு உதவி வேண்டும். ரூ.15,000 அனுப்புமாறு கூறினார். அவர் அரிதாக தான் மெசேஜ் செய்வார். நானும் எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டு உடனடியாக அவர் சொன்ன நம்பருக்கு ரூ.15,000 அனுப்பினேன்.
வாட்ஸ்அப் ஹேக்
அதன் பிறகு அந்த நம்பரை பார்த்த போது வேறு ஒருவரின் பெயர் காட்டியது. சந்தேகத்தில் அவருக்கு போன் செய்து கேட்ட போது, 'என் வாட்ஸ்அப்பை யாரோ ஹேக் செய்து விட்டார்கள். காலை முதல் இது தொடர்பாக போன் வந்துகிட்டே இருக்கு. நீ எனக்கு 500வது கால் செந்தில். சைபர் கிரைம் காவல்துறையினரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
இனிமேல் செக் செய்யாமல் யாருக்கும் பணம் அனுப்பாதீர்கள் என அறிவுறுத்தியதோடு, எவ்வளவு படித்திருந்தாலும் எளிதாக வாட்சப் மூலம் ஏமாற்றி விட்டார்களே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.