இந்தியாவில் அதிகரிக்கும் Call Merging மோசடி - ஒரு போன் காலில் மொத்த பணமும் காலி
புதிதாக அதிகரிக்கும் கால் மெர்ஜ் மோசடி குறித்து NCPI எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் மோசடி
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை UPI செயலிகள் மூலம் QR Code ஸ்கேன் செய்து நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
தொழில்நுட்பம் மக்களுக்கு பயனளிக்கும் அதே நேரத்தில், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி இதன் மூலம் மக்களை மோசடி செய்து பணம் பறிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் அரெஸ்ட்
இந்தியாவில் ஒரு நாளுக்கு சராசரியாக 7000 பேர் டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டு புகார் அளிக்காதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க கூடும்.
கடந்த ஓராண்டாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் நடந்த மோசடி மூலம் இந்தியர்கள் 4 மாதங்களில் ரூ100 கோடிக்கும் மேலான பணத்தை இழந்தனர். அதே போல், தற்போது கால் மெர்ஜ் மூலம் புது வகையான மோசடி நடைபெறுவதாக NPCI எச்சரித்துள்ளது.
கால் மெர்ஜ் மோசடி
இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து பார்ப்போம். தற்போது SMS அல்லது ஈமெயில் அல்லது போன் கால் மூலம் வாடிக்கையாளர்கள் OTP பெற முடியும்.
1.) மோசடி செய்யும் நபர் உங்களை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு நெருங்கிய ஒருவர் உங்களது நம்பரை கொடுத்தார் என ஒரு பொய்யை சொல்லி, உங்களுக்கு இலவசமாக சினிமா, ஐபிஎல் டிக்கெட் தருவதாகவோ, அதிக சம்பளத்தில் வேலை தருவதாகவோ கூறி உங்களை தொடர்பில் இருக்க வைப்பார்.
2.) பேசி கொண்டிருக்கும் போது உங்களுக்கு மற்றொரு கால் வரும், அப்போது உங்களிடம் பேசி கொண்டிருக்கும் மோசடியாளர், "உங்கள் நண்பர் தான் வேறு எண்ணில் இருந்து அழைக்கிறார் அந்த அழைப்பை மெர்ஜ் செய்யுங்கள் conference கால் பேசலாம்" என மற்றொரு பொய்யை சொல்வார்.
Scammers are using call merging to trick you into revealing OTPs. Don’t fall for it! Stay alert and protect your money. 🚨💳 Share this post to spread awareness!#UPI #CyberSecurity #FraudPrevention #StaySafe #OnlineFraudAwareness #SecurePayments pic.twitter.com/kZ3TmbyVag
— UPI (@UPI_NPCI) February 14, 2025
3.) அது உங்கள் வங்கியில் இருந்து OTP க்கு உங்களை தொடர்பு கொள்ள வரும் கால் என்பது தெரியாமல் நண்பரின் கால் என நினைத்து மெர்ஜ் செய்யும் போது, அந்த OTPயை conference CAll ல் ஒட்டுக்கேட்கும் மோசடியாளர் அதை பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டி விடுவார்.அழைப்பை துண்டித்த பிறகு தான், நீங்கள் பணத்தை இழந்தது உங்களுக்கு தெரிய வரும்.
மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?
முன் பின் அறிமுகமில்லாதவர்களின் அழைப்புகளை ஒரு போதும் இணைக்காதீர்கள். முன்னதாக அவர் தெரிவிக்கும் நபரை அழைத்து ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யாத பரிவர்த்தனைக்காக OTP-யை பெற்றால், உடனடியாக 1930 என்ற எண்ணிற்குப் புகாரளிக்கவும், மற்றும் உங்கள் வங்கியையும் எச்சரிக்கவும்.