அந்த மனசு தான்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பறக்க வைத்த மைம் கோபி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்வித்துள்ளார் நடிகர் மைம் கோபி.
நடிகர் மைம் கோபி
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 4 என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானவர் குணச்சித்திர நடிகர் மைம் கோபி.
அந்த நிகழ்ச்சியின்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், மேலும் பல உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் நடிகர் மைம் கோபி.
குவியும் பாராட்டு
இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அங்கிருந்து பெங்களூரு புறப்பட்ட அவர்களை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் வழியனுப்பி வைத்தார். இதுகுறித்து பேசிய மைம் கோபி "இதற்கு பெரிய பணச் செலவுகள் எதுவும் ஆகவில்லை.
பெரிய மனசு இருந்தால் போதும், அனைவரும் மற்றவர்களுக்கு செய்வதை உதவியாக கருதாமல், கடமையாக கருத வேண்டும். அனைவருக்கும் ஒரு வாழ்க்கைதான்.
அதை அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்" என்றார். அந்த சிறுவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மைம் கோபிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.