மறைந்த பிறகும் உதவும் டேனியல் பாலாஜி - அண்ணன் முரளியை போல் இளம்வயதிலேயே மரணம்!
நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.
நடிகர் டேனியல் பாலாஜி
சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. அதன் பிறகு பல திரைப்படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
குறிப்பாக, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. இந்த திடீர் மறைவு திரையுலகினரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்கள் தானம்
தொடர்ந்து, டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தற்போது, அவரது கண்களை மருத்துவர்கள் தானம் பெற்றனர். இதற்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
இவர் நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். முரளியும் கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.