பெண்மையை இழிவுப்படுத்தி பேசுவதா? கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயக்குமார்!
ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பேச்சு
சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறியதுடன், நடிகை திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இயக்குநர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயக்குமார் கருத்து
மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.
இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என வேதனை தெரிவித்தார். இதனையடுத்து தனது சர்ச்சை பேச்சுக்கு திரிஷாவிடம் மன்னிப்பு கோரி ஏ.வி.ராஜு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது. ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.