பாதயாத்திரை சென்ற பக்தர்கள்; வேன் மோதி கோரவிபத்து - 5 பேர் பலி!
பக்தர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேன் மோதி கோரவிபத்து
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடி பட்டியை சேர்ந்த மக்கள் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
5 பேர் பலி
இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
தொடர் விசாரணையில், கரூரில் உள்ள அரிசி ஆலையிலிருந்து, லோடு வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த டிரைவர் சௌந்தரராஜன் தஞ்சாவூர் பகுதியில் மூட்டைகளை இறக்கி விட்டு மீண்டும் கரூர் திரும்பியிருக்கிறார்.
வளம்பக்குடி அருகே சென்ற போது டிரைவர் சௌந்தரராஜன் கண் அசந்து தூங்கிவிட்டதாக சொல்லபடுகிறது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன் பக்தர்கள் கூட்டத்தில் மோதியதில் இந்த கோர விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.