உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து பயங்கர விபத்து; 2 பெண்கள் பலி - 50 பேர் காயம்!
உளுந்தூர்பேட்டை அருகே லாரி-கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்து
திருச்சியில் இருந்து சரக்கு லாரி ஒன்று சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி அழகுராஜா என்பவர் தனது மனைவி, மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆசனூர் அருகே சென்று கொண்டிருக்கையில் லாரியின் பின்பக்கம் கார் மோதியது. மேலும், அதே வழியில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.
2 பெண்கள் பலி
இதற்கிடையில் சிக்கிக்கொண்ட கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில், அழகுராஜா பலத்த காயமடைந்த நிலையில் மனைவியும், மகளும் உயிரிழந்தனர். கார் மீது மோதிய வேகத்தில் சொகுசுப்பேருந்து இடது புறம் உள்ள 10 அடி உயர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் மற்றும் 50 பயணிகள் காயமடைந்தனர்.
உடனே, தகவலறிந்த போலீஸர காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.