ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு: மக்களுக்கு பாதிப்பா - அமைச்சர் தகவல்!
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு மக்களை பாதிக்காது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதால் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆரஞ்சு பாக்கெட் விலை மட்டும் அதிகரித்தது குறித்து அமைச்சர் நாசர் கூறியதாவது, ஆவின் நிறுவனத்தில் வினியோகிக்கப்படும் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அமைச்சர் தகவல்
பழைய விலைக்கே கிடைக்கும். நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை ஏற்றாமல் பழைய விலைக்கு அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கே வழங்குகிறோம். சில்லரை விற்பனையில் மட்டும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை (கொழுப்பு சத்து அதிகம் கொண்டது) லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக மாற்றி அமைத்துள்ளோம்.
தனியார் பால் பாக்கெட் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பால் பாக்கெட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் லிட்டருக்கு ரூ.70-க்கு விற்கிறார்கள். ஆவினில் இப்போதுதான் ரூ.60 ஆக மாற்றி அமைத்து உள்ளோம். தமிழ்நாட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை டீ கடை, ஓட்டலில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மக்களுக்கு பாதிப்பு இல்லை
தயிர் தயாரிக்கவும் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கமர்சியல் பயன்பாட்டுக்கு முழுமையாக இந்த பால் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக விலையை மாற்றி அமைத்துள்ளோம். இதே வெளிமாநில தனியார் பால் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
ஆவினில் தயாராகும் 60 லட்சம் பாக்கெட் பாலில் 10 லட்சம் பாக்கெட் பால்தான் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ஆகும். அதாவது 6 லட்சம் லிட்டர் பால்தான் அதிக கொழுப்பு உடைய பால் ஆக விற்பனைக்கு வருகிறது. வீடுகளில் நீல நிற, பச்சை நிற பால் பாக்கெட் தான் அதிகமாக வாங்குவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
50 லட்சம் பாக்கெட் பால் இதில் விற்பனையாகிறது. பொதுமக்கள் நலன் கருதி பால் விலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருந்தார் என தெரிவித்தார்.