விசிகவின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் - பின்னணி என்ன..?
தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துணை பொதுச்செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாடு கடந்த ஜனவரி 26-ம் தேதி திருச்சி அடுத்த சிறுகனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் VOICE OF COMMONS என்கிற அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா என்பவர் விசிகவில் இணைந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு திருமாவளவனோடு நெருங்கிப் பழக ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா, விசிகவில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டபோது, அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனிடமும் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவனின் அழைப்பை ஏற்று கட்சியில் இணைந்தவருக்கு, துணைப்பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜூனா
தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பின் தலைவர், தமிழ்நாடு ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என விளையாட்டுத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ஆதவ் அர்ஜூனா, விசிகவில் இணைந்ததே பலருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.
தற்போது அவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜூனா, விசிகவில் இணைந்து மக்கள் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை கட்சி முடிவு செய்யும் என்றார். மேலும், விளையாட்டுத் துறையை போல அரசியலிலும் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.