சென்னை வெள்ளம் - மீட்புப்பணிகள் சிறப்பாகவே நடைபெற்றது - திருமாவளவன்!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஒரு மாத ஊதியத்துடன் சேர்த்து 10 லட்ச ரூபாயை கட்சி சார்பாக அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
‘மிக்ஜாம்’ புயல்
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருமா செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று முதல்வர் முக ஸ்டாலினின் வேண்டுகோளிற்கு இணங்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்துடன் சேர்த்து கட்சி சார்பில், ரூ.10 லட்சம் நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “புயல் பாதித்த பிறகு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்ட அவர், 4000 கோடிக்கான வடிகால் திட்டப் பணிகள் பாதி அளவு முடிந்திருக்கிறது என்று புள்ளி விவரங்களை நம்மால் பார்க்க முடிகிறது என்றார்.
அப்பணிகளை விரைவில் செய்வார்கள் என்றும் அடுத்த மழைக்கெல்லாம் இந்த பாதிப்பு இருக்காது என்று நாம் நம்புவோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.