கல்லூரியின் முதல்வரிடம் உண்மை கண்டறியும் சோதனை - மருத்துவமனையை சுற்றிவளைத்த CISF!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சுற்றி சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா
மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி மூக்கு, கழுத்து, கை, கன்னம், உதடு, கண் ,கால்கள் எலும்புகள் முறிக்கப்பட்டு மிகக் கொடூரமான காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டு எழுந்த நிலையில் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெண் பயிற்சி மருத்துவர் உடற்க்கூறு ஆய்வில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் , அவரது பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது .
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தது.பிறகு இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.
மேலும் பெண் பயிற்சி மருத்துவர் கொலைச் சம்பவத்தில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
சிஐஎஸ்எஃப் வீரர்கள்
இந்த நிலையில் சிபிஐயின் அடுத்த கட்ட விசாரணையில் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றால்,நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட அந்த நபரின் ஒப்புதல் தேவை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்தது.
சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்களிடம் கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்த நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.