என்னை கண்டால் அவர்களுக்கு பயம் தான் - நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பரபரப்பு பேச்சு
நீலகிரி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா போட்டியிடுகிறார்.
நீலகிரி தொகுதி
வரும் மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், பாஜகவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.
கடும் போட்டி நிலவும் என அரசியல் வல்லுநர்கள் எழுதி வரும் நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது பெரும் சவாலான ஒன்றே ஆகும். தேர்தல் நெருங்கும் சூழலில் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
என்னை பார்த்தால்
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நகர பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆ.ராசா பேசியது வருமாறு,
நாட்டில் இருக்கும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் பிரதமர், முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு என்ன உரிமை என்பதை அரசியல் சாசனம் வரையறுக்கிறது.
அதனை தான் மீண்டும் பிரதமரானால் திருத்துவேன் என்கிறார் மோடி. இந்திய அரசியல் சாசனமே இல்லாமல் செய்து விடுவார்கள். மக்கள் தேர்ந்தெடுத்த டெல்லி ஜார்கண்ட் முதலமைச்சரையும் இப்போதே சிறையில் அடைத்துள்ளனர்.
அதனால் தான் இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் அழைக்கிறார். மோடிக்கு திமுகவை, குறிப்பாக என்னை கண்டால் ரொம்ப ரொம்ப பயம், ஏனென்றால் நாடாளுமன்றத்தில் அவர்களை எதிர்த்து நான் நேருக்கு நேராக கேள்வி கேட்கிறேன்.
அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட்டால் அதிபர் ஆட்சி முறை மட்டுமே இருக்கும்.
தேர்தல் என்பது ஒரே முறை தான். கேள்வி கேட்டால் சிறை என்ற சூழல் உருவாகும். ஜனநாயகத்திலேயே பல பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனி ஒரு முறை மீண்டும் மத்தியில் இவர்கள் ஆட்சி வந்தால் ஜனநாயகமே இருக்காது.