இறுதி சடங்கில் திடீரென எழுந்த சிறுமி! என்ன நடந்தது?
இறுதி சடங்கில் சிறுமி திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுமி
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் காமிலா ரோக்சானா மார்டினேஸ்(3). கடந்த சில தினங்களாக சிறுமி காமிலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சிறுமியை சேர்த்துள்ளனர்.

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்து சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளது.
இறுதிச்சடங்கு
இறந்த சிறுமிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது சவப்பெட்டியில் வைத்து இருந்த சிறுமியின் கண்களில் திடீரென அசைவு தெரிந்தது. இதனைக் கண்டு அதிர்சியில் என்ன செய்வதென்று திகைத்த பெற்றோர்கள், உறவினர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், சிறிது நேரத்திலேயே சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.