ரயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழப்பு - தொடரும் துயரம்!
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
ரயில் பாதை
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கோவை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், கேரளா மதுக்கரையில் இருந்து வாளையார் வரையிலான 12 கி.மீ., ரயில் பாதை வனப்பகுதி வழியாக செல்வதால், தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயிலில் அடிபடுவது தொடர்கிறது.
இந்நிலையில், கேரளாவின் வாளையார் கஞ்சிகோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் வந்தன. இந்த யானைகள் கூட்டம் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
யானை பலி
அப்போது கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மோதியது. இதில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், அந்த யானையுடன் வந்த குட்டி யானை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது.
இது குறித்து ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் கேரள மாநில வனத்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.