கிராமத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள்..மாந்திரீகம் செய்ததாக சந்தேகம்? 5 பேர் படுகொலை!
ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாந்திரீகம்
சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் தான் சுக்மா. இங்கு மந்திரீகம் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை இருந்துதான் வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இட்கல் கிராமத்தில்,
கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தை அல்லது ஒரு ஆண் இறந்து கொண்டிருந்தனர். இவர்களின் இறப்புக்கு இரண்டு தம்பதிகள் உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தான் காரணம் என அப்பகுதி மக்கள் சந்தேகப்பட்டனர்.
படுகொலை
இவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருபவர்களை மாந்திரீகம் செய்து கொன்றுவிடுகின்றனர் என்று பழி கூறிவந்தனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தை கொன்று விட கிராம மக்கள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து, கண்ணா(வயது 34), அவரது மனைவி பிரி, புச்சா (வயது 34), அவரது மனைவி அர்ஜோ (வயது 32) மற்றும் மற்றொரு பெண் லச்சி (வயது 43) ஆகிய 5 பேரை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் ராஜேஷ், ஹித்மா, சத்யம், முகேஷ், பொடியம் ஆகிய 5 பேரையும் இது தொடர்பாக கைது செய்துள்ளனர்.