அளவு கடந்த பாசம்: குழந்தைகளை காப்பாற்ற போராடி உயிரை விட்ட நாய் - என்ன நடந்தது?
பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றி நாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் 'ஹென்றி'
அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வேந்திரன். இவர் தனது மனைவி சாந்தி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். செல்வேந்திரன் கடந்த 11 ஆண்டுகளாக 'ஹென்றி' என்ற நாயை வீட்டில் வளர்த்து வந்தார்.
இந்த நாயை தங்களது குடும்பத்தில் ஒருவரைபோல் பாவித்து அளவு கடந்த பாசத்துடன் அவர்கள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள தோப்பிலிருந்து பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்ததும் குறைத்து சத்தம் எழுப்பிய நாய் ஹென்றி, குழந்தைகளை தனது காலால் தள்ளி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
உயிரிழப்பு
பின்னர் அந்த பாம்பை விரட்ட அதனுடன் சண்டையிட்டு போராடியது. அப்போது அந்த பாம்பு நாயை கண்டித்துள்ளது. இருந்தும் கவலைப்படாமல் நாய் கடித்து குதறியதில் அந்த பாம்பு செத்துள்ளது.
ஆனால் பாம்பின் விஷம் ஏறியதில் நாய் ஹென்றி மயக்கமடைந்துள்ளது. இதுகுறித்து விவரம் அறிந்து வந்த செல்வேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே நாய் இறந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர், குழந்தைகளை காப்பாற்றி வீர மரணம் அடைந்த நாய் ஹென்றிக்கு பதாகை வைத்தும், சுவரொட்டிகளை ஒட்டியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் முன்னிலையில் நாய் ஹென்றிக்கு இறுதிச்சடங்கு செய்து புதைத்தனர்.