ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள் - பரபரப்பு தகவல்!
ஆழ்துளை கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்த குழந்தையை காப்பாற்றிய சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விழுந்த குழந்தை
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் லச்யான் என்னும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு வசித்து வரும் சதீஷ் முஜகொண்டா (29) - பூஜா (25) என்ற தம்பதிக்கு சாத்விக் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீஷின் தந்தை வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நிலத்தில் விவசாய தேவைக்கு 30 அடிக்கு ஆழ்துளை கிணறு தோண்டினார்.
ஆனால் நீர் கிடைக்காததால், அதை மூடாமல் அப்படியே சென்றுவிட்டார். அப்போது விளையாடி கொண்டிருந்த சாத்விக் அந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, பெற்றோர் புகார் படி தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு உதவியோடு சத்விக்கை மீட்கும் பனி தொடங்கியது.
மலையில் தொடங்கிய பணியில் கிணற்றில் இருந்த குழந்தைக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தினர். 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை தலைகீழாக இருந்துள்ளார். இதை அறிந்த மீட்பு குழு கிணற்றின் பக்கவாட்டில் எந்திரங்களை வைத்து குழி தோண்டினார்கள்.
அதே சமயத்தில் குழந்தையின் காலில் கயிறு கட்டி தூக்க முயற்சித்ததில் முடியாமல் கைவிடப்பட்டது. குழுவினர் மீண்டு குழி தோண்ட முடிவு செய்தனர்.
மீட்கப்பட்ட நிமிடங்கள்
விடிய,விடிய தோண்டியதில் 10 முதல் 12 அடி வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால்,12 அடிக்கு மேல் பாறை இருந்ததால் சிரமம் ஏற்பட்டது.
பாறைகளை வெடி வைத்து உடைத்தால் வரும் அதிர்வு குழந்தையை இன்னும் ஆழத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதால், எந்திரங்கள், கைகள் மூலமாகவே பாறைகளை உடைக்க மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். மீட்பு பணியின் இடையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் சாத்விக் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பணியை தீவிரப்படுத்தி 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டபட்டது. இதனை அடுத்து, இந்த குழியின் வாயிலாக ஒருவர் நுழைந்து குழந்தை சிக்கியிருந்த பகுதியோடு இந்த குழியை இணைத்தனர். அந்த வழியாக குழுவை சேர்ந்த ஒருவர் குழந்தையை தனது கையால் கெட்டியாக பிடித்து வெளியே எடுத்தார்.
வெளியே வந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள். சுமார் மற்றும் 20 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டதால் அங்கிருந்த குழந்தையின் பெற்றோர்கள், மீட்பு குழுவினர்கள், அதிகாரிகள் என அனைவரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.