மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற 98 இந்தியர்கள் பலி - கடும் வெப்பநிலைக்கு காரணம் என்ன?
ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா சென்ற 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹஜ் புனித யாத்திரை
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். வாழ்நாளில் இஸ்லாமியர்கள் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை செல்வது அவர்களின் குறிக்கோள். இந்த வருடம் ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இதுவரை ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபிய சென்றுள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 98 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மத்திய வெளியுறவு செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்தியர்கள்
இதில் அவர் கூறியதாவது, . இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதில் 98 இந்தியர்களை இழந்துள்ளோம். கடும் வெப்பநிலை போன்ற இயற்கை காரணிகளோடு விபத்து உள்ளிட்டவையும் இந்த உயிர்ப்பலிகளுக்கு காரணமாகி உள்ளன. அதில் 4 இந்தியர்கள் விபத்துக்களால் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 187 ஆகும் என தெரிவித்தார்.
இது வரை இறந்தவர்களில் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனகல் மற்றும் துனிசியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்துள்ளதாக அந்த நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் எகிப்த்தை சேர்ந்தவர்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
புவியியல் அமைப்பு
இங்கு நிலவும் கடுமையான வெப்பநிலைக்கு காரணம் மெக்காவின் புவியியல் அமைப்பு தான் என காரணம் என கூறப்படுகிறது. மெக்கா 7 மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்காக அமைந்துள்ளதால், சுற்றியுள்ள மலைகள் வடக்கிலிருந்து குளிர்ந்த காற்றை வரவிடாமல் தடுக்கின்றன, இதனால் வெப்ப அலை வெளியேறுவதில்லை. இதுவே இங்கு நிலவும் அதிகப்படியான வெப்ப நிலைக்கு காரணம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சவுதி அரேபியாவில் 0.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை அதிகரித்து உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தற்போது அங்கு 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது.