ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி - பரிதவிக்கும் மருத்துவ தம்பதி!
ஒரு குடும்பத்தில் 9 பேர் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
2023இல் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். அதில், 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் இறங்கிய நிலையில், 15 மாதங்களாக போர் நடைபெற்றது. தொடர்ந்து உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
9 குழந்தைகள் பலி
இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சு சமரசத்திற்கு வராததால், காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், காசாவில் கான் யூனிஸ் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில், ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாதி அல் நஜ்ஜர் என்ற டாக்டரின் 10 குழந்தைகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ தம்பதியின் (நஜ்ஜர்-ஆலா) குழந்தைகளில் தப்பித்த ஒரு சிறுவனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த 9 குழந்தைகள் ஒரு வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களாவர். தற்போது ஆலா படுகாயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.