10 கல்லூரிகளில் பணியாற்றிய 189 பேராசிரியர்கள் - அம்பலமான பகீர் முறைகேடு!
189 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றி மோசடி அம்பலமாகியுள்ளது.
பேராசிரியர் முறைகேடு
அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பில் 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், 'ஆர்கிடெக்ட்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ளன.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற, ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கல்வி நிறுவன விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும். அதில், கட்டட உறுதித்தன்மை, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு சான்றளிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து, அண்ணா பல்கலை குழுவினர், நேரடியாக கல்லுாரிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்நிலையில், 'அறப்போர் இயக்கம்' சார்பில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம், புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
விசாரணை குழு
அதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 353 பேராசிரியர்கள் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து, 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசியுள்ள அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ், எங்கள் தரவுகளில் உள்ள பேராசிரியர்களின் பிறந்த தேதி, பெயர், ஆதார் எண் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்ததில்,
189 பேர் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் மாற்றி பதிவு செய்து, ஒரே நேரத்தில், பல கல்லுாரிகளில் பணியில் இருப்பதுபோல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மொத்தம், 52,500 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 2000 ஆசிரியர் பணியிடங்களை, 189 பேர் தங்களின் பிடியில் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களை போலியாக கணக்கு காட்டி மாணவர்கள் கல்வியில் மண்ணை அள்ளி போடும் கல்லூரி நிர்வாகம் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அண்ணா பல்கலைக் கழகம் ( CAI பிரிவு - Inspection Committee) மற்றும் 2 முதல் 11 கல்லூரிகள் வரை ஒரே நேரத்தில் வேலை செய்வதாக… pic.twitter.com/vfHDruQqzD
— Arappor Iyakkam (@Arappor) July 23, 2024
இவர்களில் ஒருவர், 32 கல்லுாரிகளில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடி. இதில் ஈடுபட்டவர்கள் மீதும், போலி ஆவணங்களை பயன்படுத்தி, பேராசிரியர்கள் விபரத்தை தாக்கல் செய்த கல்லுாரிகள் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.