வீட்டிற்குள் நைசாக வந்த கொள்ளையர்கள்.. அரிவாளை சுழற்றிக் கொண்டு ஓட ஓட விரட்டியடித்த 82 வயது முதியவர் - குவியும் பாராட்டு!
முதியவர் ஒருவர் திருடர்களை விரட்டியடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடர்கள்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி 30 வயதான இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் சஞ்சய் காந்தி, சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். குழந்தையை வைத்து தனியாக இருக்கும் ஜெயலட்சுமிக்கு துணையாக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவார்.
நேற்று இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்பொழுது திடீரென வீட்டின் பின்புறம் வழியாக முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து மெதுவாக வீட்டிற்குள் வந்து ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறித்தனர்.
முதியவரின் வீரச்செயல்
இந்நிலையில், அந்த முதியவர் தடுக்க முயன்றார். அப்பொழுது கொள்ளையர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் ஆத்திரத்தில் அந்த முதியவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வீசினார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறிஅடித்து தப்பி சென்றனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் துரத்தி பிடிக்கமுயன்றனர், ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி சென்றனர். இது குறித்து அறிந்த போலீசார் சிசிடிவி கேமராவின் உதவியுடன் கொள்ளையர்களை பிடித்தனர்.
அதில் திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த சினநேசன் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து அறிந்த பொதுமக்கள் முதியவரின் வீரச்செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.