காணாமல் போன சிறுவன்; கழிவுநீர் ஓடையில் கிடந்த சடலம் - பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!
மாயமான மாணவனின் சடலம் பள்ளி வளாகத்தில் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன்
பீகார் மாநிலம் பாட்னாவில் டைனி டாட் அகாடமி என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இங்கு அதே பகுதியை சேர்ந்த ஆயுஷ் (7) என்ற மாணவன் படித்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று இருந்த மாணவர், மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவனை தீவிரமாக தேடி உள்ளனர்.
அவர்களுடன் மாணவனின் உறவினர்களும் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சடலம்
இந்த நிலையில், இன்று பள்ளியில் தேடியபோது அங்கு உள்ள கழிவுநீர் ஓடை ஒன்றில் சிறுவன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், சிறுவன் பலியான செய்தியை கேட்டு ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு குவிந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே இது நடந்ததாக கூறி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சிலர் வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தினர்.
மேலும் பள்ளிக்கு செல்லும் சாலையில் டயர்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதேபோல போராட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவன் உயிரிழந்தது எப்படி என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.