நெஞ்சு வலியால் துடித்த தந்தை; மறுத்த ஆம்புலன்ஸ் - தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற சிறுவன்
நெஞ்சு வலியால் துடித்த தந்தையை 7 வயது மகன் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
துடித்த தந்தை
மத்திய பிரதேசம், பைலாரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், ரமேஷ் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அவரது மனைவி, உடனே அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.200 பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. அதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்துவிட்டார்.
ஆம்புலன்ஸ் அலட்சியம்
இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டியை கொண்டு வந்து, அதில் தனது கணவரை படுக்கச் செய்தார். பின்னர் அவரும், அவரது 7 வயது மகனும் அந்த தள்ளுவண்டியை சுமார் 5 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.