நெஞ்சு வலி ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன? அறிந்து கொள்வோம்

lifestyle-health
By Nandhini Nov 22, 2021 08:48 AM GMT
Report

நெஞ்சு வலிக்கும் மாரடைப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது.

அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

நெஞ்சு வலி ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன? அறிந்து கொள்வோம் | Lifestyle Health

காரணம் என்ன?

நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும்.

ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

இதய வலி - அறிகுறிகள்

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு - அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு