பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6,362 கோடி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சர் விளக்கம்
பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கபட்டது குறித்து ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பட்ஜெட்
பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று(24.07.2024) தாக்கல் செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினி வைஷ்ணவ்
இதனையடுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். இதில் பேசிய அவர், தமிழகத்துக்கு பல்வேறு ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் ரூ.6,362 கேடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரயில்வே பணிகளுக்காக ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாடு
இது கடந்த 2009 - 2014 ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இது 7 மடங்கு அதிகம். கடந்த பத்து ஆண்டுகளில், 687 பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.33,467 கோடி செலவில், 1302 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் ‛அம்ரித்’ திட்டத்தின் அதிநவீன வசதிகளுடன் நவீனமாக மாற்றப்படும்.
Tamil Nadu has been allocated an outstanding outlay of ₹ 6,362 Cr. for a multitude of Rail infra projects: Hon'ble MR Shri @AshwiniVaishnaw #Budget2024 #BudgetForViksitBharat #UnionBudget2024 pic.twitter.com/jMi7LGAo3X
— Ministry of Railways (@RailMinIndia) July 24, 2024
சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. மேலும், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது என பேசியுள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.19,848 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.10,586 கோடியும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.9,959 கோடியும், அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ரயில்வே பணிகளுக்கு ரூ.837 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.