கலவர பூமியாக மணிப்பூர்; 1,700 வீடுகள் சூறையாடல் - 60 பேர் உயிரிழப்பு!
மணிப்பூர் வன்முறையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறை
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால்
அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இதனை கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
60 பேர் உயிரிழப்பு
இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், வன்முறையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 231 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டவர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நாள் முதல் தற்போது வரை நிலைமை பற்றி உள்துறை அமித் ஷா, கண்காணித்து வருவதாக என தெரிவித்துள்ளார்.