கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேர்... 4 பேர் சடலமாக மீட்பு!
ஆற்றில் மூழ்கிய 6 பேரில், 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இருவரை தேடி வருகின்றனர்.
கொள்ளிடம்
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 40 பேர் சுற்றுலா பயணிகளாக இன்று காலை பூண்டி கோவிலுக்கு வந்தடைந்தனர்.
அவர்களில் சிலர் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 6 பேர் ஆற்றில் திடீரென மூழ்கி மாயமானார்கள். உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
4 பேர் உயிரிழப்பு
இகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி, மாயமானவர்களை தேடி வந்தனர். தீயணைப்பு படையினர் நீண்டநேரம் தேடியதில் 2 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் தூத்துக்குடி சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ் மற்றும் பிருத்திவிராஜ் என்பது தெரியவந்தது. இதில், மேலும், இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
தற்போது மீதமுள்ள இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் படகு மூலம் தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.