ராம்நாட்டில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டி; மொத்த எண்ணிக்கை 6 - பரபரப்பு!
ராமநாதபுரத்தில் பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து சுயேச்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (ஓ.பன்னீர்செல்வம்) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று ஒரே நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரும் குழப்பம்
இதனால் அந்த தொகுதியில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்று செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே பெயரில் இந்த 6 பேரும் சுயேட்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால், தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.