வவ்வால் கறி தின்றதால் பரவும் நோய் - 48 மணி நேரத்தில் 53 பேர் உயிரிழப்பு
காங்கோவில் பரவும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டது. தற்போது கொரோனா பதிப்பில் இருந்து மீண்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், சில நாடுகளில் புதிது புதிதாக நோய்கள் பரவி வருகிறது.
அதே போல் மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் அடையாளம் காணப்பட்ட இந்த மர்ம நோயால் இதுவரை 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 சிறுவர்கள் வவ்வால் சாப்பிட்ட பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட தீவிர காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மூலமே இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது.
48மணி நேரத்தில் உயிரிழப்பு
நோய் பாதித்த 48 மணி நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருவதால் மருத்துவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. நோய் பாதித்தவர்களின் மாதிரிகள் காங்கோவின் தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
ஆய்வு முடிவில், எபோலா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நோய் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக டிசம்பர் மாத தொடக்கத்தில், நாட்டின் பான்சி சுகாதார மண்டலத்தில் மட்டும் அந்த நோய்க்கு 143 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. தற்போது மீண்டும் மர்ம நோய் பரவி வரும் நிலையில் அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.