விடுமுறைக்காக 5 வயது சிறுவன் அடித்து கொலை - உடன் படித்த நபர்கள் செய்த கொடூரம்
விடுமுறைக்கு ஆசைப்பட்டு உடன் படித்த 5 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதரஸா
டெல்லி பிஜ்புரி பகுதியில் மதரஸா ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதரஸாவில் 5 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில மாதங்களாப் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதரஸாவுக்குச் சென்ற சிறுவனின் தாய் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்றுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு
அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு கதறித் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை மதரஸாவுக்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு, உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்துவதாக உறுதியளித்தையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விடுமுறை
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதரஸாவில் படிக்கும் 3 மாணவர்களால் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 3 மாணவர்களுமே 9 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவனுக்கு கல்லீரல் சிதைந்து, வயிறு மற்றும் வலது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறுவனை ஏன் அடித்துக் கொன்றீர்கள் என்று காவல்துறையினர் கேட்டபோது சிறுவன் கெட்ட வார்த்தை பேசியதால் அடித்ததாகவும், சிறுவன் உயிரிழந்ததால் மதரஸாவில் விடுமுறை அளிக்கப்படும் என்பதால் அடித்துக் கொன்றதாக கூறியுள்ளனர்.