விஷச்சாராயம் விவகாரம்; வீணாக்க மனமில்லாமல் செய்தியை அறிந்தும் குடித்த 5 பேர் பாதிப்பு!
கள்ளசாராய பலிகளை அறிந்தும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்ததை குடித்த 5 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
விஷச்சாராயம் விவகாரம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீணாக்கமல் குடித்தவர்கள்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னதாகவே சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனது. அதுபோன்று கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் பாக்கெட் சாராயத்தை இருப்பு வைத்துள்ளனர்.
நேற்றைய தினம் கள்ளச்சாராய மரணம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாவதை பார்த்த நிலையிலும் வாங்கி வைத்திருந்த சாராயத்தை வீணடிக்க மனமில்லாத சிலர் தங்கள் வீட்டில் இருப்பு வைத்திருந்த சாராயத்தை நேற்று இரவு பருகி உள்ளனர்.
அப்படி பருகியதாகக் கூறி பெண் உள்பட 5 பேர் இன்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.