பிரபல தனியார் கல்லூரி சுவர் இடிந்து விபத்து; 5 பேர் பரிதாப பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு!
சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து விபத்து
கோவை, சுகுனாபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தச் சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதனையொட்டி 5 அடி தூரத்தில் கான்கிரீட்டால் ஆன மற்றொரு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை சீனிவாசா கட்டுமான நிறுவனம் எடுத்து செய்து வந்தது. அதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
5 பேர் பலி
அதனைத் தொடர்ந்து அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் கல்லூரி வளாகத்தில் புதிதாக கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென மாலையில் பயங்கர சத்தத்துடன், புதிதாக கட்டப்பட்டு வரும் சுவரின் அருகே இருந்த பழைய சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கொல்லி ஜெகநாதன் (வயது53), நக்கிலா சத்யம் (48), ரப்பாகா கண்ணையா (49), மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ்கோஸ் (40), பருண் கோஸ் (35) 5 பேரும் சிக்கி கொண்டனர்.
அப்போது கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ரப்பாகா கண்ணையா, பிஸ்கோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பருன்கோஸ் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் உயிரிழந்தார்.
அதனையடுத்து இதுகுறித்து உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.