மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு - தீவிரமாகும் சிறப்பு விசாரணை
மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம காய்ச்சல்
ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் பலர் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 40 நாட்களில் இதன் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்தான். மேலும் ஒரு குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இதற்கிடையில், விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதில் 5 பேர் உயிரிழந்தனர்.
15 பேர் பலி
அதன்பின், மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதில் 3 பேரும், வேறொரு குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு அதில் 7 பேரும் உயிரிழந்தனர இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சார்பில் மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்கொண்ட உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதன் முடிவில் தொற்றுநோய் பரவல் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து எஸ்.பி. வஜகத் ஹுசைன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.