பறக்கும் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணங்கள்; மக்கள் தலையில் விழுந்து விபத்து! - 5 பேர் பலி
விமானத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள் அகதி முகாமில் விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர் தீவிரம்
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை சுமார் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையில், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலை சேர்ந்த 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். மேலும்,100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஒப்பந்தம் அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.
இன்னும் 134 கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது.
வீசப்பட்ட நிவாரணகள்
காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு அமெரிக்க ராணுவம் வான்வழியாக உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், காசா அகதிகள் முகாமில் பொதுமக்கள் உணவுக்காக வரிசையில் காத்துக்கொண்டு இருந்தப்போது, விமான படை நிவாரணங்களை பாரசூட் மூலம் தரையிறக்கினார்.
அப்போது, திடீரென பொருட்களின் தொகுப்பு ஒன்றின் பாரசூட் திறக்காததால் அதிவேகமாக கீழே முகாமில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து, ஒரு சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயனற்றது என்றும், நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஹமாஸ் குழுவால் நிர்வகிக்கப்பட்டுவரும் காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.