இன்று 4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் - அகிலேஷ் முதல் மொய்த்ரா வரை நட்சத்திர வேட்பாளர்கள் போட்டி!
மக்களவைக்கான 4-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது.
ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகள் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நாட்டில் 4-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. 96 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசம் - 25, பீகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேஷ் -8, மகாராஷ்டிரா - 11, ஒடிசா - 4, தெலுங்கானா 17, உத்தரபிரதேசம் - 13, மேற்குவங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1.
நட்சத்திர வேட்பாளர்கள்
இத்தேர்தலில் உத்தரபிரதேச மாநில கண்ணூஜ் தொகுதியில் முன்னாள் முதல்வர் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் லோக் சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்குவங்கத்தின் பஹரம்பூர் தொகுதியிலும், கடந்த ஆண்டு பெரும் கவனத்தை பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியும் போட்டிபோடுகின்றன.