புனித நீராடியபோது நீரில் மூழ்கிய பக்தர்கள் - 46 பேர் பலி!
பண்டிகையின்போது புனித நீராடிய பக்தர்கள் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஜிவித்புத்ரிகா
வடமாநிலங்களான பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் நேபாளத்திலும் 'ஜிவித்புத்ரிகா' என்ற பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த சமயத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து, குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவர்.
46 பேர் பலி
இந்நிலையில், இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் என 15 மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது புனித நீராடியபோது பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வரிசையில் வெவ்வேறு சம்பவங்களில் 37 குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் மாயமானதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.