இன்று முதன்முதலாக பள்ளிக்கு சென்ற நான்கரை வயது மாணவன் ஆட்டோ விபத்தில் பலி - சோகச் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தனியார் பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் ஏற்றிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் பயணம் செய்த செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
இக்குழந்தை இன்று தான் முதல்முதலாக பள்ளிக்குச் சென்றுள்ளான். ஆட்டோவில் சென்ற மற்ற 7 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செல்வ நவீனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.