போதையில் வந்த பள்ளி மாணவர்கள்.. விசாரித்த போலீசாரின் முகத்தை உடைத்த சிறுவர்கள் - அதிர்ச்சி!
ரோந்து பணிக்கு சென்ற போலீசாரை மாணவர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிக்கு சென்ற போலீசார்
சென்னை கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பாலமுருகன் 56 வயதான இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐயாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் ரோந்து பணிக்கு சென்றார். அப்பொழுது மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்குரிய நபர்களை அழைத்து விசாரித்தார், அப்பொழுது போதையில் இருந்த அந்த கும்பல், எஸ்.ஐ பாலமுருகனை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்தனர்.
தாக்குதல்
இந்நிலையில், அந்த கும்பல் போலீசாரை சுற்றிவளைத்து கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் போலீசாருக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த அவர் சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பாலமுருகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
பின்னர், தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், எஸ்.ஐ பாலமுருகனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், ஆர்.கே.நகர் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.