மீண்டும் பிரதமராகும் மோடி! இது வரை 3 முறை பதவி வகித்தவர்கள் நிலை என்ன?
மீண்டும் 3-வது முறையாக பிரதமராகும் விளிம்பில் உள்ளார் மோடி.
மோடி
குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறை தேசிய தலைவராக களம் கண்டார். முதல் மக்களவை தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்ட அவர், அத்தேர்தலில் 2 தொகுதிகளில் களம் கண்டார்.
குஜராத்தின் வதோதரா, உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் களமிறங்கி இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். அப்போது பிரதமராக பதவியேற்றவர் மீண்டும் 2019-ஆம் ஆண்டில் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமராகினார்.
சவால்கள் என்ன?
இந்த ஜெனரேஷன் கண்ட மிக பெரிய தலைவராக அவரை பாஜக நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் வாரணாசியில் இருந்து தேர்வாகியுள்ளார் மோடி.
ஆனால், கடந்த முறை போல பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் உதவியை அக்கட்சி நாடியுள்ளது. 294 இடங்களில் தற்போது வரை முன்னிலை வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை நிரூபிக்கும் வேலையில் மும்முரம் காட்டி வருகின்றது. 3 முறை பிரதமராக நாட்டை ஆண்டவர்கள் பட்டியலில் மோடி இணைந்துள்ளார்.
இவருக்கு முன்பாக முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால் நேரு 3 முறையும், இந்திரா காந்தி 3 முறையும், அடல் பிஹாரி வாஜ்பாய் 3 முறையும் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். இதில் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பதவி காலத்தின் போதே மரணமடைந்தனர்.
வாஜ்பாயின் இரண்டாவது பிரதமர் ஆட்சி கலைக்கப்பட்டது.
நேரு 16 வருடங்களும், இந்திரா காந்தி ஆகியோர் 15 வருடங்களை நிறைவு செய்துள்ள அடுத்த இடத்தில் இருக்கிறார் மோடி.
கூட்டணி ஆட்சியாக அமையவுள்ள தற்போதைய ஆட்சியை மோடி எவ்வாறு கையாளுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.