இளம் வயதில் இவ்வளவு கர்ப்பிணிகளா? முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
மிக இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவது குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
இளம் வயது கர்ப்பம்
கர்நாடகாவில் மாவட்ட அளவில் கர்ப்பிணிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 2021-22 முதல் 2023-24 வரை இளம் வயது கர்ப்பங்கள் 33,621 எனப் பதிவாகியுள்ளன.
பெங்களூரு அர்பன் மாவட்டத்தில் தான் அதிகப்படியான இளம் வயது கர்ப்பங்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக 4,324 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர். அடுத்ததாக விஜயா நகர் 2,468 பேரும், பெல்லாரி 2,283 பேரும், பெலகாவி 2,224 பேரும், மைசூரு 1,930 பேரும் கர்ப்பமடைந்துள்ளனர்.
இதற்கு காரணங்களாக சமூக பொருளாதார நிலை, மிக எளிதாக இண்டர்நெட் வசதியை பயன்படுத்தும் சூழல், சமூக வலைதளங்களின் ஈர்ப்பு, நிலையற்ற குடும்ப நிலை, செக்ஸ் கல்வி குறித்த போதிய அடிப்படை அறிவு இல்லாதது போன்றவை கூறப்படுகிறது.
என்ன காரணம்?
இதுகுறித்து பேசியுள்ள கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகன்னா கவுடா, டீன் ஏஜ் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சமூக வலைதளங்கள் நிறைய விஷயங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. இது அவர்களை தவறாக வழிநடத்தி செல்கிறது.
ஆன்லைனில் என்ன பார்க்கிறார்களோ, அதற்கு அடிமையாகும் சூழல் வருகிறது. இது வழிமாறி செல்லும் முடிவுகளை எடுக்க வைக்கிறது. மிக இளம் வயதிலேயே பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இது கர்ப்பத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இதற்கு உரிய விழிப்புணர்வும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சியும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.