இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பள்ளி; அதுவும் சென்னையில் - எத்தனை நூற்றாண்டு தெரியுமா?
இந்தியாவிலேயே பழமையான பள்ளியாக சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி விளங்குகிறது.
பழமையான பள்ளி
சென்னை ஷெனாய் நகர் பகுதியில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி கிழக்கிந்திய நிறுவனத்தால் அதன் ஊழியர்களின் குழந்தைகளுக்காக கடந்த 1715-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
மேலும், இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆங்கிலப் பள்ளி ஆகும். இந்த பள்ளியில் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் குழந்தைகள் மற்றும் இந்திய பெண்களை மணந்த ஆங்கிலேய ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமே சேர்க்க அனுமதிக்கப்பட்டனர்.
309 ஆண்டுகள்
21 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பள்ளியில் ஓர் உறைவிடம், தங்குமிடம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமையலறை ஆகியவை உள்ளன. மேலும், ஒரு நூலகம் மற்றும் கணினி மையம் ஆகியவை செயல்படுகிறது.
இந்த நூலகத்தில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல அரிய நூல்கள் இருக்கின்றன. தற்போது 309 ஆண்டுகள் பழமையான இந்த செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியையும், இங்குள்ள தேவாலயத்தையும் பாரம்பரிய கட்டடங்களின் பட்டியலில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.