சிஏஏ சட்டம்; 300 பேருக்கு இந்திய குடியுரிமை - மத்திய அரசு தகவல்!
300 பேருக்கு மத்திய அரசால் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்நாடுகளில் மத ரீதியிலான பல துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது.
இதனால், அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
மத்திய அரசு சான்றிதழ்
தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இணைக்கவில்லை எனக் கூறி நாடெங்கும் போராட்டம் வெடித்தது. இருப்பினும், 2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் விண்ணப்பித்து இந்திய குடியுரிமை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் சுமார் 300 பேருக்கு முதற்கட்டமாக இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார்.