“இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை குறித்து முடிவெடுக்க முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!

tamilnadu-samugam higt court
By Nandhini Aug 23, 2021 10:11 AM GMT
Report

கடந்த 2009ம் ஆண்டு திருச்சி, இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்த 65 பேருக்கு, இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆட்சியர்கள் தாமதம் செய்யாமல், விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வெளியுறவு துறை செயலர் ஹர்ஷவர்தன் ஷெர்ங்ளா, உள்துறை செயலர் அஜய் பல்லா, திருச்சி ஆட்சியர் சிவராசு ஆகியோர் நிறைவேற்றவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த முறை விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், தவறினால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்படும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இன்று இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளித்தது. அப்போது, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் உணர்ச்சிபூர்வமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும்,  சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என்றும் நம் நாட்டு சட்டத்தின்படி இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் விளக்கம் அளித்தது. 

“இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை குறித்து முடிவெடுக்க முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்! | Tamilnadu Samugam