கள்ளச்சாராய விவகாரம்; மேலும் 30 பேர் கவலைக்கிடம் - ஆட்சியர் அறிவிப்பால் அதிர்ச்சி!
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரம்
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் பலியாகி உள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதனால் இன்னும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
30 பேர் கவலைக்கிடம்
மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.