நாடகம் பார்த்த குழந்தைகள்; அரசு இழைத்த தூக்கு தண்டனை - கொடுமையின் உச்சத்தில் கிம்!
பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள்
வடகொரியாவில் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். அங்குச் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. அங்கு மிகவும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தென் கொரிய நாடகங்களைப் பார்த்ததற்காக 30 குழந்தைகளுக்கு வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்தார். அந்தளவுக்கு தென்கொரியா மீது வடகொரியாவுக்கு கடும் கோபம் இருக்கிறது.
இதனால் தென்கொரியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து எடுத்து வருகிறது. தென்கொரியா தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் வடகொரியா தடையும் விதித்துள்ளன. குறிப்பாகத் தென் கொரிய சீரியல்களை கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனை
கே-டிராமாக்கள் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் வட கொரியாவில் ஒளிபரப்பப்படுவதில்லை.. ஆனால் அதையும் தாண்டி இந்த சீரியல்கள் பென் டிரைவ்கள் மூலம் வடகொரியாவுக்குள் கடத்தப்படுகிறதாம். இதை வடகொரியாவில் உள்ள டீன் ஏஜ் பருவத்தினர் அதிகம் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தாக பிடிபட்ட 30 நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "30 பேருக்கு அவர்கள் மரண தண்டனை விதித்துள்ளனர். இதை ஏற்கவே முடியாது. 3 சட்டங்களின் அடிப்படையில் இந்த மரண தண்டனை விதித்துள்ளனர்" என்றார்.