பள்ளி வேனில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - ட்ரைவர் வெறிச்செயல்!
பள்ளி வேனில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசம், போபாலில் ஒரு தனியார் கிண்டர் கார்டன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயார் பள்ளி வேன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் வழக்கத்தை விட 15 நிமிடங்கள் கழித்து பள்ளி வேன் அங்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு காலையில் போட்டு அனுப்பிய துணி மாற்றப்பட்டு, ஸ்பேருக்காக வைக்கப்பட்டிருந்த துணியை அணிந்திருந்தாள்.
ட்ரைவர் வெறிச்செயல்
இதையடுத்து, சிறுமியிடம் யார் துணியை மாற்றிவிட்டது என கேட்டதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், தனது பிறப்புறுப்பில் வலி உள்ளதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அவரது கணவரை வரவழைத்து இருவரும் பள்ளிக்கு சென்று சிறுமிக்கு என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு பள்ளி நிர்வாகம் எந்த பிரச்சனையும் இல்லையென பதிலளித்துள்ளனர். அதனையடுத்து பெற்றோர் சிறுமியிடமே பொறுமையாக விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, வேனில் வரும் போது ஓட்டுநர் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதை கூறியிருக்கிறார்.
உதவியாளர் உடந்தை
உடனே சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும்,
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சிறுமி பள்ளி வேன் டிரைவரான கிஷோர் குமாரை(32) அடையாளம் காட்டியுள்ளார். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், வேனின் பெண் உதவியாளர் முன்னிலையிலேயே சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதனால் பெண் ஊழியரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் வேன் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.