பள்ளி முடிந்து வேனில் வந்த அக்கா.. ஆசையாக அழைக்க சென்ற தம்பி - இறுதியில் நேர்ந்த சோகம்!
பள்ளி வேன் மோதியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆட்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி அஞ்சுளா தேவி. இந்த தம்பதிக்கு தியா (6) என்ற பெண் குழந்தையும், ஆதிஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் தியா ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்ற தியா, பள்ளி வேனில் வந்து வீட்டின் முன்பு இறங்கியுள்ளார். அப்போது தியாவின் தம்பி ஆதிஸ்வரன்,
அக்கா என்று அழைத்துக் கொண்டே வாகனத்தின் முன்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் ஆதிஸ்வரன் மீது பள்ளி வாகனம் மோதியுள்ளது. இதில் ஆதிஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
பள்ளி வேன்
பிறகு உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். அங்கு ஆதிஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைகூடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.